Saturday, March 21, 2020

எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.

"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான்  அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்"


தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1965ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே  தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா


தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:
அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு  கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே 
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி,  பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே,  எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம்  அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.

வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.

அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும்  வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.

ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும்  சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர்,  தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.

எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.




Article From: மணி ஸ்ரீகாந்தன்
                        tamilvamban.blogspot.in

Saturday, November 30, 2019

List OF Titles Changed For MGR Movies


List Of MGR Movies In Other Languages || Part 01 ||


Related Posts Plugin for WordPress, Blogger...